சுரண்டையை புறக்கணிக்கும் அரசு விரைவு பஸ்கள் பரிதவிக்கும் பயணிகள்
சுரண்டை

 




சுரண்டையிலிருந்து இயக்கப்பட்ட அரசு விரைவு போக்குவரத்து கழக பஸ்களை நிறுத்தி சுரண்டையை புறக்கணிப்பதால் பயணிகள் பரிதவிக்கும் சூழல் ஏற்பட்டுள்ளது.

நெல்லை மாவட்டம் சுரண்டை மற்றும் சுற்றுவட்டார பகுதி பொதுமக்கள் பயன்பெறும் வகையில் அரசு விரைவு போக்குவரத்து கழக செங்கோட்டை பணிமனையிலிருந்து சென்னைக்கு இரு மார்க்கத்திலும் அரசு பஸ் 30 வருடமாக இயங்கியது. அதனை நிறுத்தி சாதனை புரியவேண்டும் என அதிகாரிகள் உறுதி எடுத்ததின் காரணமாக முதலில் சென்னையிலிருந்து சுரண்டைக்கு முதலில் நிறுத்தப்பட்டு. இப்போது இரு வழி மார்க்கமும் நிறுத்தப்பட்டது. அதே போன்று சுரண்டையிலிருந்து கொல்லம் சென்ற பஸ்ஸும் நிறுத்தப்பட்டது. மேலும் சுரண்டையிலிருந்து கோயம்புத்தூர் இயக்க பெர்மிட் உள்ள பஸ் இதுவரை இயக்கப்படவில்லை. இந்நிலையில் அரசு விரைவு போக்குவரத்து கழகத்திற்கு புதிய பஸ்கள் விடப்படும் நிலையில் சுரண்டை பகுதியில் நிறுத்தப்பட சென்னை, கொல்லம் பஸ்ஸும் கோயம்புத்தூர் பஸ்ஸும் இயக்கப்படும் என எதிர்பார்த்து இருந்தனர். ஆனால் பொதுமக்களின் எதிர்பார்ப்புகளை பொய்யாக்கும் வகையில் சுரண்டையை அரசு விரைவு போக்குவரத்து கழக செங்கோட்டை பணிமனை புறக்கணித்து உள்ளது. அதிகரிக்கும் மக்கள் தொகைக்கு ஏற்ப புதிய பஸ்களை இயக்குவதை விட்டு ஓடும் பஸ்களையும் நிறுத்துவது பயணிகளை சிரமத்தில் ஆழ்த்தியுள்ளது. ஏற்கனவே தீபாவளி பண்டிகை நெருங்கி வரும் நிலையில் அரசு விரைவு போக்குவரத்து கழக அதிகாரிகள் சுரண்டை பகுதி மக்களின் தேவைகளை பூர்த்தி செய்ய வேண்டும் என இப்பகுதி மக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர் ஆவன செய்வார்களா சம்பந்தப்பட்ட அதிகாரிகள்